[1] மெளலாசி அல்லது வஞ்சிரம் [SEER FISH]
பொதுவாக வஞ்சிரம் என்கின்ற மெளலாசி மீன் வகையானது சென்னையில் மட்டுமே வசிக்ககூடிய மக்களால் விரும்பி உண்ணப்படுகின்றது. மற்றபடி தமிழ்நாட்டின் இதரபகுதிகளில் வசிக்கின்ற மக்கள் இதை அம்மட்டும் விரும்பி உண்பதில்லை. எனவே நான் சென்னைவாழ் மக்களின் சுவைமிகுந்த மீனான இதைபற்றி அறிந்தமட்டிலும் கூறப்போகிறேன், காரணம் நான் வசிப்பது சென்னை என்பது மட்டுமல்ல அடிப்படையில் நான் மீனவக்குப்பத்தை சார்ந்தவன், தவிர என்வியாபரமே மீன் விற்பதுதான்!!
மீன் வியாபாரிகள் வஞ்சிரம் என்று கூறுவது ஒரு மூன்று அல்லது நான்கு கிலோவுக்கும் கீழேயுள்ள மீனை மட்டுந்தான், மற்றபடி அவர்கள் அதனினும் பெரிதான மீன்களை மெளலாசி என்றே அழைக்கின்றனர். இந்த வஞ்சிரம் படுவஞ்சிரம்,கோல்வஞ்சிரம், கீரிவஞ்சிரம் என்று மூன்று வகைப்படும். இதில் கோல் வஞ்சிரம் மட்டுமே பெரிதாக மெளலாசி என்று சொல்லக்கூடிய மீனாக வளர்கின்றது. மற்றபடி மற்ற இரண்டு வகைகளான படுவஞ்சிரம், கீரி வஞ்சிரம் முதலியன அவ்வளவாக கிடைப்பதில்லை, ஒருவேளை பிடிபடுவதில்லை, . எப்படியோ போங்கள்! நாம் இப்போது கிடைக்ககூடிய கோல்வஞ்சிரமாகிய மெளலாசிக்கே வருவோம்.
நான் இக்கட்டுரையை எழுதுகின்ற 2019 வருடத்தில் ஏறத்தாழ கிலோ 2000ரூபாய் வரை சென்றுவிட்டு இப்போது படிப்படியாக 1100 ரூபாய்க்கு வந்து விட்டது. எப்படி இருந்தாலும் சரி 900 ரூபாய்க்கு குறையாது. அதாவது
தலைவால் அல்லாது மத்திய பாகத்திற்கே அந்த விலை. தடாலென்று இந்த ஞாயிற்றுக்கிழமையில் வாங்கப்போனால் 1400 ரூ என்கிறார்கள்.
தலைவால் அல்லாது மத்திய பாகத்திற்கே அந்த விலை. தடாலென்று இந்த ஞாயிற்றுக்கிழமையில் வாங்கப்போனால் 1400 ரூ என்கிறார்கள்.
கோல்வஞ்சிரமாகிய மெளலாசி அதிகபட்சம் 40 கிலோ வரை வளருமென என் நண்பன் கூறினான். ஏனெனில் அதை வெட்டியும் இருக்கிறான். நான் பார்த்தவரையில் 22 கிலோ மீனை பார்த்திருக்கிறேன். ஒரு ஸ்லைஸ் அரிந்தால் முக்கால் கிலோ வரைக்கும் வரும், அவ்வளவு பெரிதான மீன். படுவஞ்சிரம் மற்றும் கீரிவஞ்சிரம் ஆகியன படுருசி, தவிர கன்னியாகுமரி கடலில் பிடிக்கப்படும் மீனுக்கே அதிகருசி என நான் சொல்வேன்
அரபிக்கடலுக்கு அத்தளவு மகத்துவம்!
அரபிக்கடலுக்கு அத்தளவு மகத்துவம்!
பொதுவாக ஐஸ் வைத்த மீனை சாப்பிடக்கூடாது என்பது பொது நம்பிக்கை, வாடிக்கையாளரும் அவ்வாறே கேட்பார்கள், ஆனால் வஞ்சிரம் பிடிக்கப்போகும் மீனவர்கள் தங்கல் என்று சொல்லக்கூடிய இலாஞ்சியில் சென்று பத்து நாட்களுக்கு மேலாக கடலில் தங்கியே இந்த வஞ்சிரம் மீன்களை பிடிப்பார்கள். [கட்டுமரம் அல்லது சாதரணமான படகுகளில் சென்று மீன்பிடித்தாலே அரைநாள் அல்லது ஒருநாள் ஆகும்] இப்படி பிடிக்கப்படும் மீன்களை ஐஸில் வைத்தே எடுத்து வருவார்கள். ஆக உள்ளூர் மக்களுக்கு ஐஸில் வைக்கப்பட்ட மீன்களே சுவைக்கும். ஐஸ் வைக்கப்படாத மீன்கள் எனில் அது மீனவர்கள் நாவிற்கு வேண்டுமானால் ருசிக்கக்கூடும்.
அப்படி ஐஸில் வைக்கப்படாமல் பிடித்துவரப்பட்ட மீனை சமைத்தால் எப்படி இருக்கும்? முதலில் நாற்றம் கடுமையாக இருக்கும். சமைத்தால் அன்று முழுக்க வீடே மீன்மணம் வீசும். காரணம் அதனில் இருக்கும் இரத்த ஓட்டம்! பிற்பாடு வாசனை திரவியங்கள் போடு கழுவி தள்ளினால் தான் அந்த வாசமே போகும். இரண்டாவதாக அந்த ஐஸில் வைக்கப்படாத மீனை வறுத்தால் அப்பளமென முறுக்கி கொள்ளும். சதையும் மென்மையாக இராது. ஆகவே ஐஸில் வைக்கப்பட்ட மீனே உள்ளூர் மக்களுக்கு சாலச்சிறந்தது என அடித்துச்சொல்வேன்.
ஓமேகா-3 என்ற சத்து நிறைந்த இம்மீன் இதயத்திற்கு மிகவும் நல்லது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இம்மீன் நல்லதாக இருக்கிறதா என பார்ப்பது எப்படி? முதலில் அதன் கண்களை பார்க்க வேண்டும், தெளிவாக இருக்கும், அடுத்து செவுளை, இரத்தத்தில் தோய்ந்து சிவப்பாக இருக்க வேண்டும், மீனை வெட்டினால் சதைப்பகுதி அழுத்தமாக இருக்க வேண்டும், ஒரு நான்கு முறை வாங்குகளேன், பிற்பாடு நீங்களே நிபுணர் ஆகிவிடுவீர்கள்.
அடுத்ததாக அரைகோலா என்றொரு மீன் உண்டு. இது வஞ்சிரம் போலவே உருவைக்கொண்ட போலிவஞ்சிரம். விலையும் படுகுறைவு.சுவையோ படுமட்டம். பலஓட்டல்களுக்கு இந்த மீனையே வாங்கி செல்கின்றனர். எனவே படுகவனமாக பார்த்து வாங்க வேண்டும்.