சோமபானம் அல்லது சுரா பானம்.
ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்து வேதங்களை எழுதிக்கொண்டு இங்கிருந்த பூர்வகுடி மக்களை அடிமைப்படுத்தி அல்லது துரத்தியடித்து...இப்படியே சொல்லிக்கொண்டு போனால்.... இந்த இடம் அதற்கானது அல்ல, அதைவிட உயர்ந்தது, ஆம் அவர்கள் தயாரித்திருந்த சோமபானம் அல்லது சுராபானத்தை தயாரிப்பது எப்படி?
சுமார் 2000 வருடங்களுக்கு முன்னர் அவர்கள், அதுதான் ஆரியர்கள், கைபர்போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் உள்நுழைந்தனர். உள்நுழைந்தனர் என்றால், ஏதோ அவன் வீட்டிற்குள் நுழைந்தான் என்பதுபோல் சுலபமாக அல்ல, இடையில் வெவ்வேறான இடையூறுகள், இயற்கை பேரிடர்கள், பசிபட்டினிகள், பஞ்சங்கள் ஆகியன நேரிட்டிருக்கும். எல்லாவற்றையும் சமாளித்து இங்கே வந்தவர்களுக்கு தூண்டுதலாக இருந்தது எது? அதுதான் போதை. அதுவும் இயற்கை மூலிகைகளான சாறே உட்புகுந்து தெம்பூட்டும் போதை.
இந்த சோமபானத்தை தயாரிக்க அவர்கள் எவ்விதமான மூலிகைகளை எடுத்திருப்பார்கள். அதைப்பெற அவற்றை அவர்கள் காய்ச்சியிருப்பார்களா? காயவைத்திருப்பார்களா? வேறுபொருட்கள் ஏதேனும் சேர்த்திருப்பார்களா? அல்லது மூலிகைகளை பறித்தவுடன் வாயில்போட்டு மென்றிருப்பார்களா? எதுவும் தெரியாது. எனக்கு? எனக்கும் தெரியாது. தெரிந்திருந்தால் இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்க மாட்டேன். நிம்மதியாக குவளை சுராபானத்தை குடித்துவிட்டு ரிக் வேதத்தில் ஒன்பதாவது மண்டல மந்திரங்களை ஓதிக்கொண்டிருப்பேன்.
இன்றைய கண்டுபிடிப்பாளர்கள் ஸைபீரிய காடுகளில் கிடைக்கும், “எப்ரடா”, என்ற தாவரத்தில் இருந்துதான் மேற்கண்ட பானத்தை தயாரித்திருப்பார்கள் என்று உறுதியாக அல்லது அனுமானத்தின் அடிப்படையில் கூறியிருக்கிறார்கள் என எழுத்தாளர் பா.இராகவன் கூறியிருக்கிறார். மற்றும் அத்தாவரத்தை கண்டகண்ட பாத்திரங்களில் இடாமல், “துரோணா”, என்ற மரக்குடுவையில்தான் எடுக்க வேண்டுமாம். கூடவே சில மாவுகளை சேர்த்து சூடு செய்தால் சுராபானம் தயார். நிஜமாகவே குணம் மணம் சுவை எல்லாம் கூடுதலாகவே இருந்திருக்கும் என்பது என் கணிப்பு. ஆனால் இந்த போதையூட்டும் சமாச்சாரங்கள் எல்லாமுமே, அடிப்படையில் ஒருவித நீச்சி நாற்றத்தையே கொண்டிருக்கும் என்பது என் அனுமானம், உதாரணமாக என் நண்பன் ஒருவன் ஐந்துநட்சத்திர விடுதியொன்றில் ஷாம்பெய்ன் சாப்பிட்டு இருக்கின்றான் [ஓசியில்தான் அன்பர்களே] அதன் குணத்தையும் சுவையையும் பற்றி சொல்லாமல், மணத்தைபற்றி மட்டும் சொன்னான். சாட்சாத் பெசண்ட்நகரில் விற்கும் அல்லது விற்ற சுண்டகஞ்சியின் மணமேதான் இந்த ஷாம்பெய்ன், அல்லது அவன் குடித்த ஷாம்பெய்ன்.
தவிர ராகுல சாங்கிருத்தியான் இதுபற்றி தன் புகழ்பெற்ற வால்காவிலிருந்து கங்கைவரை நூலில் என்ன சொல்லியிருக்கிறார்? கஞ்சாசெடி இலைகளை அரைத்து தேன் மற்றும் குதிரை பாலுடன் கலந்து விட்டால் சோமபானம் தயார். ஆஹா எவ்வளவு சுலபம் பார்த்தீர்களா? தொட்டுக்கொள்ள எட்டுமாத குதிரை இறைச்சியின் வறுத்த தொடை துண்டம்வேறு!! அனுபவித்து இருக்கின்றார்கள்
ஆனால் சனாதன பிராமணர்களோ இந்தக்கூற்றை அபத்தமென்று உரைக்கின்றனர். இது சோமலதை என்ற தாவரக்கொடியிலிருந்து பெறப்படுவதாகும், ஆனால் போதையேயின்றி உடலுக்கு நன்மை செய்யும் பானமாம்!! ம்ம்ம். இந்த சோமலதை எனும் தாவரம் இமயமலையின் வடமேற்கு பகுதியான முஜாவத் என்ற மலையில் விளைந்தது ஆகும். சோமக்கொடிஎன்பது அபூர்வமான காயசித்தி மூலிகை! ஆனால் இப்போது அழிந்து விட்டது!!! அடடே!!
ஆக பிராமணர்கள் கூறுவது என்னவெனில், சோமபானம் என்பது போதையேயின்றி உடலுக்கும் மனதிற்கும் நல்லது செய்வதாகும், ஆனால் சுராபானம் என்பது போதை மயக்கம் தந்து உடலுக்கு ஊறு விளைவிப்பதாகும்!
வேதங்களுக்கு பல்வேறு பண்டிதர்கள் விளக்கவுரை எழுதியிருக்கின்றார்கள். சாயணர், மஹீதரர், கடைசியாக ஜம்புநாதன் முதலியவர்கள். ஆனால் இவர்கள் அனைவரிடமிருந்து தயானந்த சரஸ்வதி வேறுபடுகிறார். அவர் இந்த சோமபானம் என்பது ஜங்கிடமணி என்று கூறியிருக்கிறார், இந்த ஜங்கிடமணி உடல்நோய்களை தீர்க்குமாம்!
என்னவோ போங்கள், எனக்கு சுராபானம் சுவைக்கவேண்டும் போலிருக்கிறது, தேன் தயார், குதிரை பாலையும் வாங்கிவிடலாம், இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது ஆவின் பாக்கெட் பால், கஞ்சாஇலை தான் சிக்கலே, யாரிடமாவது இருந்தால் கொடுத்து உதவுங்களேன்!!!
பெரு.முருகன்!!!
