Wednesday, 24 July 2019

நூல் அறிமுகம். பள்ளியறை ஒடிஸி

நூல் அறிமுகம். ஹோமரின் பள்ளியறை ஒடிஸி. தமிழில் பெரு.முருகன். 



 2002-ஆம் ஆண்டில் மேற்கு கேகேநகரில் ஒரு நடைப்பாதை புத்தக்கடையில் BEDSIDE ODESSEY என்ற நூலைக் கண்டெடுத்து அதன் உள்ளடக்கத்தில் நடையில் கவரப்பட்டு உடனடியாக ஸ்நேகா பதிப்பகத்திற்காக மொழிப்பெயர்க்க தொடங்கினேன். ஒரு ஆறுமாத காலத்தில் முடித்தும் விட்டேன். அப்போதெல்லாம் கையால்தான் எழுதுவேன், மீண்டும் அதைத் திருத்திப் உடனடியாகப் படியும் எடுப்பேன். ஆனால் ஸ்நேகா பதிப்பகம் இயங்கவில்லை. பின்பு யார் யாரிடமோ கொடுத்தும் பார்த்தேன். ஆனால் அவர்கள் படித்து முடித்து வெகு  அருமையாக வந்திருப்பதாகக் கூறுவார்கள், ஆனால் மறுபடியும் நூலைப் பற்றிப் பேசமாட்டார்கள். இறுதியாக 2012-ல் புலம் லோகநாதன் இதைப் பதிப்பித்தார். ஆனால் மொத்தத்தில் 300 பிரதிகளே போட்டிருந்தார். இப்போதுதான் முதன்முறையாகச் சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகத்தார் இந்த நூலை நல்ல முறையில் வெளியிடுகின்றனர்.




ஹோமர் அவர்கள் இலியட் மற்றும் ஒடிஸியஸ் என்ற இரண்டு புராணக்கதைகளை படைத்தாரெனப் பெரும்பாலனோருக்கு தெரிந்திருக்கும். இந்தப் புராணங்கள் சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஒடிஸியஸ் என்ற கதையில் வரும் கதாநாயகன் ஒடிஸியஸ் ஹெலன் என்ற அழகியை மீட்க, ட்ராய் நகரின் மீது போர்தொடுத்து செல்கின்றான். போர் பத்து வருடங்களாக நடக்கின்றது. இறுதியில் போரில் வெற்றிப்பெற்ற அவன் படைதோழமைகள் தம் சொந்த ஊர்களுக்குத் திரும்ப, இவன் மட்டும், திரும்புகின்ற வழிகளிலே, பல்வேறு, அழகிகளிடம், அப்சரஸுகளிடம், கன்னியர்களிடம் மாட்டிக் கொள்கிறான். பிற்பாடு அவர்களிடம் பல்வித சுகங்களை பெற்றப்பின்னால், தன் மனைவி பெனிலோப்பிடம் வந்து சேர்கின்றான். இதுவே இந்தக் கதையின் உள்ளடக்கம்!!!



ஹோமர் இலியட்டையும், ஓடிஸியஸ்ஸையும் இயற்றினார். அவை பல்வித மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அப்படியெனில் இந்த நூலில் அப்படியென்ன புதுமை? என்று கேட்டால்......... நூலின் முன்னுரையை படித்தாலே இதன் புதுமை புலப்படும். அதாவது ஹோமர் அவர்கள், சாதாரண மக்களுக்காகப் புனைந்த ஓடிஸியஸ் வேறு, மற்றும் அரசவையில் அங்கம் வகிப்பவருக்காக எழுதிய மற்றொரு ஓடிஸியஸ் வேறு என்பது புலப்படும். இரண்டாவதாக எழுதிய  இந்த நூலின் பிரதான அம்சம் காதலும் காமமும் அவை இரண்டினில் கலந்திருக்கும் மெலிதான நகைச்சுவை அம்சமுமே.



இந்த நூலை மொழிப்பெயர்த்து  பத்து வருடங்களாகிவிட்ட நிலையில் புலம் பதிப்பகம் இதை வெளியிட்டது. மீண்டும் ஒரு ஏழு வருடம் ஆகிவிட்ட நிலையில் சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் வெளியிட முன்வந்தது. அப்போது மூலநூல் என் கையில் இல்லை. ஆனால் பதிப்பக உரிமையாளர் இ-புத்தக வடிவில் அதை என்னிடம் காட்டினார். நான் எழுதிய மொழிப்பெயர்ப்புக்கும் அவர் காட்டிய மூலநூலுக்கும் இடையே இரண்டு பக்கங்கள் விடுபட்டிருந்தது தெரியவந்தது. எனினும் என்னுடைய பழைய நூலில் முடிவையும் சரியாகவே மொழிபெயர்த்திருந்தேன்.


சற்றே யோசித்து  விடுபட்ட அந்த இரண்டு பக்கங்களையும் மொழிபெயர்த்து, இணைப்பாக என்னுடைய சொந்த வார்த்தைகளில் ஒரு பத்து வார்த்தைகளை எழுதி நூலில் சேர்த்து விட்டேன். ஹோமரின் எழுத்துக்களூடே என்னுடைய வார்த்தைகளும்!!!

வாசக அன்பர்கள் இந்த நூலைப் படிக்குமாறு வேண்டுகிறேன்!!!

பெரு.முருகன்.

Monday, 22 July 2019

மர்ம மூலிகைகள். வழிமறிச்சான் பூண்டு

மர்மமான மூலிகைகள்.

[1] வழிமறிச்சான் பூண்டு.

முதன்முதலாக காசிபிச்சை என்ற சித்தமருத்துவரின் நூலில் இந்த மூலிகையை பற்றிய தகவலை பார்த்தேன். அடுத்து எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரைத்தொகுதி ஒன்றை படித்துக்கொண்டிருக்கும் போதும் இதுபற்றிய தகவலைப் பார்த்தேன். அதில் இந்த மூலிகையின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. மாறாக கன்னியாகுமரியில் மரம்செடிகொடிகள் அடர்ந்திருந்த ஒரு குறிப்பிட்ட பகுதியில் நுழைந்த அவரின் தோழன் என்ன கதிக்கு உள்ளானான் என்று அவர் அக்கட்டுரை தொகுதியில் குறிப்பிட்டு இருந்தார்.

அதாவது அந்த குறிப்பிட்ட பகுதிக்கு போன அந்த நபர் ஏதோவொன்றினால் தாக்கப்பட்டதாக நினைந்து அங்கேயே அடிப்பட்ட கட்டெறும்பு கணக்காக ஒரே இடத்தில் நினைவுதப்பி சுற்றிசுற்றி வந்து கொண்டிருக்கிறார். பிற்பாடு மீண்டு விட்டிருக்கிறார்.

இதுபற்றி முகநூலில் நான் இடுகையிட்டபோது நண்பர் ஒருவர் அதன்பெயர் திகைப்பூண்டு என்று சொல்லியிருந்தார். வேறொரு நண்பர் சன் கண்ணன் என்பவர், அது கொடைக்கானலில் மதிமயக்கிய வனம் என்ற பகுதியில் இருப்பதாகவும் மனிதர்கள் போவதற்கு அந்த இடம் தடைச்செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

இப்போது மற்றொரு நண்பர் அதன் புகைப்படத்தை போட்டிருக்கிறார். மேலே கண்டதுதான் அப்புகைப்படம். ஒருவேளை அதில் நுண்ணிய முட்கள் இருக்கக்கூடும். பாதத்தில் அம்முட்கள் தைத்து மூளைக்குள் விஷமேறி பாதிக்கப்பட்ட நபரின் நினைவுகளை குழப்பிவிடக்கூடும். அல்லது அதன் மணமே இந்த வேலையை செய்யக்கூடும்.

எதுவாக இருந்தாலும் நான் நேரில் பார்த்து இதன் குணத்தை அறிந்தேனில்லை. மற்றும்  ஒருநாள் இல்லை ஒருநாள் இதை நேரில் நான் பார்க்கக்கூடும், அப்போது இதன் குணத்தை காணக்கூடும்.

பெரு.முருகன்.  

Saturday, 6 July 2019

ஆண் மீனா? பெண் மீனா? எது சுவையாக இருக்கும்?

ஆண் மீனா? பெண் மீனா? எந்த மீன் சுவையாக இருக்கும்? ஒரு பாமரனின் பால்யகால நினைவுகள்.  பெரு.முருகன்.

 மீன் என்றாலே நாவில் எச்சில் ஊறச்செய்யும்,பொதுவாக அதன் முட்களை நீக்கிவிட்டு சதையினை தின்பதிலும்,சிலவகை மீன்களில் அதன் எலும்புகளை, சக்கையாக பற்களால் மென்று தின்பதிலும்,ஒரு சுகம் கிடைக்குமே,அப்போது இரம்பை மேனகை எல்லாம் பக்கத்தில் நின்றாலும் தெரியாதுதவிர எளிதில் ஜீரணமாகி, இரத்தத்தில் கலந்துஉடலுக்கு தேவையான சத்துகளை அள்ளி வழங்குவதில், மீன்களுக்கு நிகர் மீன்களே தான்!

உலகத்திலுள்ள தானியங்கள் காய்கறிகள் ஜீவராசிகள் முதலியன முற்றாக அழிந்து போனாலும் மனிதக்குலத்திற்கு தேவையான உணவை இன்னும் நூறுவருடங்களுக்கு வழங்க கடலன்னை தயாராக இருக்கிறாள்.தவிர மரபணுமாற்ற அயோக்கித்தனங்கள்,வேதியியல் கருமங்கள் முதலானவை கடலை இன்னும் தொடவில்லை.காரணம் உலககடல் பரப்பளவின் சதவிகிதம் 70.8,மீதமிருக்கும் 29.2 மட்டுமே நிலத்தின் பரப்பளவு ஆகும்.


1975-களில் மெரினா கடற்கரை குப்பத்திற்கு அவ்வப்போது என் அம்மா அழைத்துப்போவார்கள்,சோறுபொங்க அரிசி வாங்கப்போயிருக்கும் அந்நிலையில்,பசிதாளாமல் குழந்தைகள் எல்லாம் கத்தும் நான் உட்பட; அப்போதுதான் பிடித்துவந்திருக்கும்’லாப்ஸ்டார்’, எனப்படும் சிங்கிறால்களை மிளகாய்தூள் உப்பு போட்டு,கடாயில் வறுத்தெடுத்து கொடுப்பார்கள்,ஒவ்வொரு இறாலும் சுமார் ஒருகிலோவரை தேறும்.இப்போது செத்து நாற்றமடிக்கும் அந்த இறாலின் விலை சுமார் இரண்டாயிரம் ரூபாயிலிருந்து துவக்கம்.சிலநேரம் கதம்ப இறால்கள் [பிரியாணிக்கு இந்த இறாலே தலைச்சிறந்தது] வெள்ளை இறால்கள்,சமைக்கை இறால்களும் சமையலில் உண்டு. அந்த இறால்களேயே தின்றுவிட்டு பசியாறி உறங்குவதும் உண்டு. இறால்களில் நல்லகொழுப்பு,அயோடின் முதலான சத்துகள் உண்டு. உடல் வளர்ச்சிக்கு உகந்தது.ஆனால் கூடவே வாயுத்தொல்லையைத்தரும். இப்படித்தான் 2001-ல் என் அம்மா எனக்கு ஒன்றரை கிலோ லாப்ஸ்டார் இறாலை வறுத்துவைக்க,தெரியாமல் அதைதின்று முடித்த ஒருமணி நேரத்திற்குள் கைகால்களில் பிடிப்பு ஏற்பட்டு, அடுத்த இரண்டு நாட்களுக்கு ஏராளமான வெள்ளைபூண்டை தின்ன வேண்டியதாயிற்று. அதனால் இறால்களில் சிறிய அளவிலான இறால்களையே வாங்கவேண்டும். அதுவும் மழைமெதுவாக பெய்திருக்கும் அந்த நேரத்தில் பிடிக்கப்படும் பொடி இறால்களையே வாங்கவேண்டும். முப்பது வயதிற்கு மேற்பட்டோர் கொஞ்சம் பெரிய அளவிலான இறால்களை கொஞ்சம் அதிகப்படியாக தின்றுவிட்டால் பிற்பாடு மூட்டுவலியில் கொண்டுபோய் விட்டுவிடும்.

சென்னைக்கு அருகிலிருக்கும் பழவேற்காட்டில், ஆரம்பாக்கத்தில் பிடிக்கப்படும் இறால்கள் உலகப்புகழ் பெற்றவை. ஆங்கே பிடிக்கப்படும் இறால்களை வாங்கி சமைத்து சாப்பிட்டு பாருங்கள், அப்போது மனிதனாக பிறந்தவன் எத்தளவு பாக்கியசாலி எனத் தெரியவரும். ஆனால் பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப கடலோ அல்லது ஆற்று இறாலோ கிடைப்பதில்லை, நூற்றுக்கு தொண்ணூற்றைந்து சதவிகிதம் வளர்ப்பு இறால்களே! அவை சுவையின்றி தன்விரலை தானே கடித்துக்கொள்வது போலுள்ளது, மணம்?ஆழ்ந்து மூச்சை வலித்தால் சர்வரின் வியர்வைவாடை வருகிறது அவ்வளவுதான்!

மத்திமீனை அநேகமாக எல்லோரும் உண்டிருப்பார்கள், குறிப்பாக  கேரளாவில் இதன்பயன்பாடு அதிகம். ஆங்கு இதை சாளை என்று அழைப்பார்கள்.தமிழகத்து மத்திமீனைவிட கேரளாவின் மத்திமீன் ருசியில் சதையில் மணத்தில் மருத்துவகுணத்தில் தலைச்சிறந்தது,எக்காலத்திலும் ஏழைகளின் உணவு இதுவே,காரணம் விலைக்குறைவாக கிடைக்கும்.

ஆனால் வியாபாரிகளுக்கே கேரளா மத்தி கிடைப்பது சிரமமாக இருக்கிறது.தமிழ்நாட்டில் வரத்துவேறு குறைந்துக்கொண்டே வருகிறது.இந்த மீனில் பாஸ்பரஸ் கால்சியம் பொட்டாசியம் முதலான சத்துகளோடு பி2 என்ற விட்டமினும் உள்ளது,இது நரம்புமண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது.இத்தோடு கவளை மீனையும் சேர்த்துக்கொள்ளலாம்.இந்த மீனை மாங்காய்போட்டு குழம்பு வைத்து உண்டால் சொர்க்கம் தெரியும்,அந்தக்குழம்பையே மறுநாள் சுண்டவைத்து சாப்பிட்டால் சொர்க்கத்தின் இந்திர பதவியே கிடைத்துவிடும்.

பொதுவாக அங்காடிக்கு வருபவர்கள் புதிதான மீனாகத்தான் கேட்பார்கள்,அதிலும்  ஐஸ் வைக்காத மீனாகத்தான் வேண்டுமென்பார்கள்.வியாபாரிகளும்,நீங்கள் விரும்புகிறாற் போல்தான் என்று மீன்களை விற்றுவிடுவார்கள். ஐயா சாமிகளே,உங்களுக்கு ஒரு உண்மையை இங்கே சொல்லியாக வேண்டும். ஆற்றில் கிடைக்கும் விரால்மீன்,ஆற்றுநண்டு,அயிரைமீன் முதலான ஆற்று அல்லது குளத்து மீன்களே உயிருடன் கிடைக்கும், கடலில் அந்த சாத்தியமில்லை, சாதாரணமாக தங்கல் எனும் இலாஞ்சியில்தான் மீன் பிடிக்க போகிறார்கள்,குறைந்தபட்சம் பத்து நாளாவது கடலில் தங்கி மீன் பிடிப்பார்கள்.கட்டுமரத்தில் அல்லது சாதாரண ஃபைபர் படகில் சென்றாலும் குறைந்தது அரைநாளாவது ஆகும். பிடிக்கும் மீன்களை ஒழுங்காக ஐஸ் வைத்து பதப்படுத்தி அவைகளை அங்காடிக்கு எடுத்து வருவார்கள், அதுவே நல்ல மீன்.தவிர அப்போதே பிடித்து அப்போதே வறுத்தால் உங்களால் சாப்பிடமுடியாது,காரணம் கடினமாக இருக்கும், உதாரணத்திற்கு வஞ்சிரம் மீனை அப்போதே பிடித்து, அதை ஸ்லைஸ் போட்டு வறுத்தால் அப்பளமென குவிந்து கடினமாகிவிடும். எனவே புதிதான மீன் என்றால் அது மீனவர்களின் நாக்குக்கே சுவை, உள்ளூர் மக்களுக்கோ பெரும்பகை. காசிமேடு மீனவர் ஒருவர் சங்கரா மீனை அப்போதுதான் அதாவது சுமார் இரண்டுமணி நேரத்தில் பிடித்து, குழம்புசெய்து அதை எனக்களித்தார், சாப்பிட்டால் அதன் சதை அவ்வளவு கடினம்,கூடவே ருசியும் குறைவு, இதேமீனை ஒரு அரைநாள் ஐஸ்ஸில் வைத்து சாப்பிட்டு இருந்தேனென்றால் அதன் சுகம் தனிதான்! ஆனால் அவருக்கோ இந்த புத்தம்புது மீன்தான் உயிர்! இதேபோல் புதிதான வஞ்சிரம் மீனின் தலையினையோ அல்லது உடலினையோ குழம்பு வைத்துவிட்டால் பிறகு வீட்டினில் எல்லா பொருட்களிலும் அந்த வாசனை அல்லது நாற்றம் அடிக்கும்.

இப்போது தமிழகத்தில் மீன் தடைபிடி காலம்,ஆனால் சாதாரண ஃபைபர் படகில் சென்று பிடிக்கலாம். சென்னைநகரில் வஞ்சிரத்தின் விலை கிலோ எண்ணூறு ரூபாய்,அதை வெட்டி விற்றால் கிலோ ஆயிரத்து இருநூறிலிருந்து ஆயிரத்து நானூறு வரைக்கும் விற்கிறது. இந்த வஞ்சிரமானது படுவஞ்சிரம்,கோல்வஞ்சிரம்,கீரிவஞ்சிரம் என் மூன்று வகைப்படும்.மற்றவற்றை தவிர்த்து,கோல்வஞ்சிரமே,அதிகபட்சம் நான் பார்த்தவகையினில், நாற்பது கிலோ வரைக்கும் வளரக்கூடியது, இதை “மெளலாசி”என்றழைப்பார்கள்.வஞ்சிரமீனை பொறுத்தவரை கீரிவஞ்சிரம் அலாதிசுவை வாய்ந்தது.பெரிதாகும் மெளலாசியில் கன்னியாகுமரி மீன்களுக்கு சுவை அதிகம்,அரபிக்கடலுக்கு அந்தளவு மகத்துவம்.இந்த வஞ்சிரமீனில் ஒமேகா3 என்ற சத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.தவிர நல்லவகை கொழுப்புகளும் அதிகம்.இவையாவும் இதயத்திற்கு வலுசேர்ப்பன.

ஆனால் வஞ்சிரம் என்ற பெயரில் “அரைகோலா மீனை’’ விற்பவர்கள் சிலபேர் இருக்கின்றனர்.இந்த அரைகோலா பார்ப்பதற்கு அச்சுஅசல் வஞ்சிரத்தை போல இருக்கும்,ஆனால் சுவையோ படுமட்டம்.

கானாங்கத்தி அல்லது கானாங்கெளுத்தி மீனை உண்டிருப்பீர்கள்,குறிப்பாக கேரளாவில் இது பிரசித்தம்.இந்த மீனை அடிக்கடி உண்டுவந்தால் மன அழுத்தத்தில் இருந்து தப்பிக்கலாம்.இவ்விடத்தில் “காலா மீன்”[SALMON] அதைப்பற்றி கூறியேயாக வேண்டும். நம்மூர் காலாவை பற்றி தெரியவில்லை,ஆனால் வெளிநாடுகளில் வாழும் காலாவை பற்றி ஒரு ஒரு வீடியோவை பார்த்து அசந்து போனேன்.கடலில் வாழும் இந்த காலாக்களின் தாய்வீடு சிலநூறு கிலோமீட்டர்கள் தள்ளியுள்ள ஆறோ அல்லது அருவியோ!அவைகள் குஞ்சுபொறிக்கும் காலம் வந்ததும் கடலில் நீந்தி,ஆற்றின் முகத்துவாரத்துக்கு வந்து,அதையும் கடந்து, பாறைகளின் மீதேறி,இறுதியில் தாம் பிறந்த இடத்திற்கு வந்து சேர்ந்து முட்டைகளை பொறிக்கின்றன.இங்கே வங்காள விரிகுடாவில் இருக்கும் இவ்வகையான மீன்கள் எங்கேசென்று குஞ்சு பொறிக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்தான் கூறவேண்டும்.இந்த காலாக்களை தின்று வந்தால் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்,தவிர நூறு கிராம் காலா மீனில் அதே நூறுசதவீதம் விட்டமின்.டி உள்ளது என்பது அதிகப்படியான ஆறுதல்.

நெத்திலி மீன்[ANCHOVY]இந்தப்பெயர் நெய்தோல் என்பது நெய்தோலியாகி பின் நெத்திலி ஆக மருவிவிட்டதாக, மீன்பிரியர் எழுத்தாளர் நாஞ்சில்நாடான் கூறுவார்.இந்த மீனில் சுண்ணாம்பு சத்து அதிகமுள்ளது.முள்ளிருந்தாலும் அதையும் மென்று முழுங்கலாம்.கொஞ்சம் அதிகப்படியாக உண்டால் உடலானது லேசாக உஷ்ணம் தட்டும்,ஆனால் அதெல்லாம் கிடையாது என்று என் அம்மா கூறினார்கள்,கூடவே இன்னொரு அரிதான தகவலையும் சொன்னார்கள்.அதாவது மீனவக்குப்பங்களில் குழந்தையுடன் உள்ள தாய்மார்களின் இல்லங்களில் நெத்திலி மீனை சமையல் செய்யமாட்டார்கள்.அப்படியே செய்தாலும் உண்டுவிட்டு மீதக்குழம்பை குப்பையில் கொட்டிவிடுவார்கள்.குழந்தைக்கு பாலூட்டும் தாயானவள் அதீத ஆசைப்படும் நெத்திலிமீனை உண்டுவிட்டால்,அதன் தலைமுடியை காட்டிலும் மெல்லிய முட்கள்,நேராக பாலில் கலந்து குழந்தைக்கு வயிற்று உபாதையை உண்டு பண்ணிவிடும்.

இந்த நெத்திலியை பிடிக்கும்போது காக்காசீ என்ற பொடிமீன் கலந்து வரும்,நூறு கிலோ நெத்திலியில் சுமார் பத்து கிலோக்கள் வரை இவை கலந்து வரும்.காக்கை கூட சீ என்று போய்விடுமா எனத்தெரியாத இந்தமீனை அப்போது கீழே கொட்டிவிடுவார்கள்,ஆனால் ஒரு வருடத்திற்கு முன் காரைக்காலில் ஒரு ஓட்டலில் உணவுண்டபோது இதை தட்டுநிறைய சுடச்சுட கொண்டுவந்து வைத்தப்போது அதன் சுவை பிரமாதம். 

சூரை மீனைப்பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்.இதில் வெள்ளரா சூரை,இரத்த சூரை என்று இருவகைகள் உண்டு.ஆங்கிலத்தில் இதை டீயூனா [YELLOW FIN TUNA]என்றழைப்பார்கள்,இரத்த சூரையானது பார்ப்பதற்கு குட்டி வஞ்சிரம் போலவே இருக்கும்,அதை அரிந்தால்,உள்ளிருக்கும் சதைமுழுவதும் செக்கசெவேலன்று இருக்கும்.இந்த மீனிலிருந்துதான் சிங்களவருக்கு விருப்பமான “மாசி கருவாட்டை” தயார் செய்கின்றனர்.ஆராய்ச்சியாளரெல்லாம் தேவையில்லை,இதிலிருக்கும் நூறு சதவிகிதம் இருக்கும் புரதச்சத்தைப்பற்றிக்கூற; மெரினா குப்பத்தை சேர்ந்தவர் முனியப்பன்,பத்து வருடங்களுக்கு முன்னர் இந்திய அளவில் ஆணழகர்,சில திரைப்பட நடிகர்களுக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார், அவரின் உடற்பயிற்சிக்கூடத்தில் நான் பயிற்சி செய்துக்கொண்டிருந்தபோது அவர் சொன்ன தகவல்;அப்போதைய பம்பாயில் நடந்த ஆணழகன் போட்டியின்போது,மற்றெல்லா ஆணழகர்களும் ஸ்டிராயிட் என்கிற மருந்தூசி,மாட்டுக்கறி என்றெல்லாம் போய்க்கொண்டிருக்க,இவர் மாத்திரம் அந்த ஒருமாதகாலம் மேற்ச்சொன்ன இரத்தசூரை மீனையே உட்கொண்டு,உடலை நன்றாக முறுக்கேற்றி,போட்டியில் சொல்லத்தகுந்த இடத்தை பெற்றிருக்கிறார்.

சுறாக்களில் சுமார் நான் கேள்விப்பட்டவரை எழுப்பத்தைந்து வகைகள் உண்டு.பால்சுறா,அடுக்குப்பல் சுறா,வேளா சுறா,ஆத்துமட்டை,கொம்பன் சுறா,உளுவை,செஞ்சுறா,பல்லி,படங்கான்,சிங்கப்பல் சுறா,குயின் சுறா முதலானவை அவற்றில் சிலவாகும்.சுறாவை புட்டு வைப்பார்கள்,அல்லது மிளகு குழம்பு வைப்பார்கள்.சில தெலுங்கர்கள் வறுக்கவும் செய்வார்கள்.சுறாவில் அதன் எலும்புகளும் பல்லில் பட்டால் பொடிப்பொடியாக உதிர்ந்து ஜீரணமாகிவிடும்.கொழுப்பே அற்றது.தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்கவில்லையெனில் பால்சுறாவில் குழம்பு வைத்து தருவார்கள்.இதிலும் வேகாத சுறாக்கள் உண்டு.ஆட்டுக்கறி வாங்கும்போது கிடாஆடாகவே பார்த்து வாங்கிறோம்,கோழியில் பெட்டைகோழியாகவே பார்த்து வாங்கிறோம்,அதேபோல் சுறாக்களிலும் பெண்சுறாக்களையே வாங்கவேண்டும்.இல்லையென்றால் குக்கரில் வேக ஒருநாள் பிடிக்கும்!

சுறாவை பற்றி சொன்னால் கூடவே திருக்கை மீனையும் பற்றிக்கூறவேண்டும்.இந்த மீனையும் ஏறத்தாழ சுறாவை போலவே பயன்படுத்தலாம்.வேகாத மீனைப்பற்றி சொன்னேன்,அத்துடன் “உதடி’’என்ற மீனையும் சேர்த்துக்கொள்ளலாம்.கொடுவா மீனில் எனக்கு தெரிந்து சுமார் பத்துவகை உண்டு.அசல் கொடுவா,கொருக்கை,கல்கொடுவா,கூரை கத்தலை,பொன்னாங்கண்ணி,இவற்றோடு மேற்ச்சொன்ன உதடி வகையும் உண்டு.சமைத்து உண்டால் அன்றுமுழுக்கவும் சூயிங்கம் போல் மென்றுக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

பாறை மீனில் ஏராளமான வகைகள் உண்டு.தேங்காய்பாறை,செங்கட்டான் பாறை,சொரி பாறை,முயல் பாறை,உருட்டாம் பாறை,முதக்கொண்டை பாறை,நாமப் பாறை முதலான.இதில் ருசியில் தேங்காய்பாறைக்கு முதலிடம்,அடுத்து முயல்பாறைக்கு தனியிடம்,ஏனெனில் இந்த மீன் வகையானது அங்காடிக்கே வராது.வியாபாரிகளே பங்கிட்டுக்கொள்வார்கள்,இதன் ருசியும் படுபிரமாதம்,சாப்பிடுவதும் தெரியாது,ஜீரணமாகுவதும் தெரியாது,இதன் சதை பச்சைக்குழந்தையின் கன்னமென படுமென்மையாக இருக்கும்.

சொரி பாறை என்ற ஒரேஒரு மீனை உண்டாலே உடல் சூட்டை அடைந்து கண்கள் சிவந்துப்போகும்.நான் ஒரேமுறை தான் சாப்பிட்டேன் அதற்கே கண்கள் பொங்கிவிட்டன.

கடமா அல்லது கணவாய்களில் ஊசிகடமா முட்டைக்கடமா மற்றும் பேய்க்கடமா முதலியன உள்ளன.பேய்க்கடமா என்பது நாம் கடலில் காணும் ஆக்டோபஸி வகையில் சிறுஅளவிலானது. முட்டைக்கடமா என்பது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவது,தின்றால் இரப்பர் மாதிரி இருக்கும்.இவைகளில் ஊசிகடமாவே தின்பதற்கு ஏற்றது.எலும்பும் முள்ளும் தோலுமற்ற இதனை தின்ன கோடிகொடுத்தாலும் தகும்.ஆனால் இதில் ஏதேனும் மருத்துவக்குணம் இருக்குமா என்று தெரியாது. 

வவ்வால் மீனை[POMFRET] தெரியுந்தானே! தெரியாவிட்டால் உடனே போய் தெரிந்துகொள்ளுங்கள்,கூடியவிரைவில் இவ்வகை மீன் இணையத்தில் புத்தகங்களில் போட்டோக்களாக மட்டுந்தான் கிடைக்கக்கூடும்.

கருப்பு,வெள்ளை என இரண்டு வகைகள் உண்டு.பின் மோவான் எனப்படும் சைனீஸ் வெண்ணிற வவ்வாலும் இதில் அடங்கும்.ஐந்து கிலோ எடைவரையில் இந்த மீனைப்பார்த்திருக்கிறேன்.முதலில் வெள்ளை வவ்வாலும்,மோவானும் பறிபோனது..இப்போது கருப்பு வவ்வாலும் பறிபோகிறது.எல்லாம் ஏற்றுமதிதான்!முற்காலத்தில் வவ்வாலை பிடிக்கும் முறையை கேட்டாலே நெஞ்சு சிலிர்க்கும்!முதலில் கடலின் மேலே வவ்வால் இருக்கும் இடத்தை அடைந்து,அதன்மேலே தென்னைஓலையை பரப்புவார்கள்.மேலே நிழலைப்பார்த்ததும் கீழே வவ்வால் கூட்டமாக வரும்.உடனே கயிறு கட்டிக்கொண்டு வலையுடன் ஒருஆள் கடலுக்குள் குதிப்பான்,கயிறின் மறுநுனி அவன் மனைவியின் தம்பியிடத்தில் இருக்கும்.கடலுக்குள் குதித்தவன் முன்னாடி வலையை விட்டுக்கொண்டே நீந்திப்போக,ஏதுமறியா வவ்வால்களின் கூட்டம் அவனை பின்தொடர்ந்து சென்று வலைக்குள் மாட்டிக்கொள்ளும்.ஏறத்தாழ மூச்சற்றுப்போய் அவன் கயிறை அசைக்க,அக்காளின் தாலியை மனதில்கொண்டு,சடசடவென கயிறை மச்சான்காரன் இழுப்பான்.வவ்வாலின் ருசியும் தனிரகம்!எல்லா மீன்களிலும் கழிவுகள் முப்பது சதவிகிதம் என்றால் இதில் கழிவு பத்துசதவிகிதம்தான்!பொதுவாக மீன்களை சூடாகவே சாப்பிடவேண்டும் என்பது விதி,அதிலும் இந்த வவ்வால்மீனுக்கே முதலிடம்.

கடலில் கிடைக்கும் சங்கு,சிப்பி,ஆளி முதலானவைகளுக்கு மனிதனுக்கு வரும் மூலவியாதிகளை வரவிடாமல்,மீறி வந்துவிட்டால் அவற்றைபோக்கும் ஆற்றலுண்டு.அவ்வளவு குளிர்ச்சி!இந்த குளிர்ச்சிக்கு நேரெதிராக நண்டு இனங்கள்,நான்கைந்து சாப்பிட்டால் போதும்,உங்களை பாத்ரூமுக்கோ அல்லது பெட்ரூமுக்கோ ஓடவைக்கும்.கிழங்கான்[LADY FISH] ஒரு அழகான மீன்,அது ஆண்மை பலப்பட செய்கிறது என இராமேஸ்வரம் பகுதியில் நம்பப்படுகிறது.இது உண்மையோ பொய்யோ தெரியாது,ஆனால் சென்னை சுற்றுப்புறபகுதிகளில் ”தும்பிலி’’என்ற மீனை கிழங்கான் என்றுசொல்லி விற்கிறார்கள்,இருப்பினும் தும்பிலியும் நல்ல சதைபற்றான மீன்தான்! என்ன அதன் வாசனை அல்லது நாற்றம் சற்று கூடுதலாகவே வீசும்.அதைவிட முக்கியமான சங்கதி என்னவெனில் நான் அதை சாப்பிட்டதே இல்லை, இனிமேலும் சாப்பிடமாட்டேன்.என்ன இது அநியாயம் என்பவர்கள், ஜாம்பஜாரில் சுறாமீன் மட்டுமே விற்கும் ஒரு இஸ்லாமியர் அதை சுவைத்ததே இல்லை,அதுபோல் விரால்மீன்கள் விற்கும் இளைஞர் அவர் குடும்பமும் விரால் என்றால் வெறுப்பு!எனக்குதான்!

உயர்ரக புரதம்,அயோடின்,நல்ல கொழுப்பு,ஊக்கமருந்தென உடலை செயல்பட வைக்கும் விட்டமின் –டி,ஒமேகா-3 மற்றும் பல்வித விட்டமின்கள்,மினரல்கள் என இலவசமாக கிடைக்கும் மீன்களை, ஒருகாலத்தில் என் தாயார், ஒரு நோயை வரவிடாமலும், அல்லது வந்த நோயை தீர்ப்பதிலும், உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கும் தகுந்தாற்போல் தினமும் சுவையாக சமைத்து தருவார்! அது அந்தக்காலம்! பொற்காலம்!இப்போது?

பெரு.முருகன்.
 

       




Saturday, 29 June 2019

நல்ல மீன்களை தின்ன பழகுவோம்[1] மெளலாசி என்கின்ற வஞ்சிரம்.

[1] மெளலாசி அல்லது வஞ்சிரம் [SEER FISH]



பொதுவாக வஞ்சிரம் என்கின்ற மெளலாசி மீன் வகையானது சென்னையில் மட்டுமே வசிக்ககூடிய மக்களால் விரும்பி உண்ணப்படுகின்றது. மற்றபடி தமிழ்நாட்டின் இதரபகுதிகளில் வசிக்கின்ற மக்கள் இதை அம்மட்டும் விரும்பி உண்பதில்லை. எனவே நான் சென்னைவாழ் மக்களின் சுவைமிகுந்த மீனான இதைபற்றி  அறிந்தமட்டிலும் கூறப்போகிறேன், காரணம் நான் வசிப்பது சென்னை என்பது மட்டுமல்ல அடிப்படையில் நான் மீனவக்குப்பத்தை சார்ந்தவன், தவிர என்வியாபரமே மீன் விற்பதுதான்!!



மீன் வியாபாரிகள் வஞ்சிரம் என்று கூறுவது ஒரு மூன்று அல்லது நான்கு கிலோவுக்கும் கீழேயுள்ள மீனை மட்டுந்தான், மற்றபடி அவர்கள் அதனினும் பெரிதான மீன்களை மெளலாசி என்றே அழைக்கின்றனர். இந்த வஞ்சிரம் படுவஞ்சிரம்,கோல்வஞ்சிரம், கீரிவஞ்சிரம் என்று மூன்று வகைப்படும். இதில் கோல் வஞ்சிரம் மட்டுமே பெரிதாக மெளலாசி என்று சொல்லக்கூடிய மீனாக வளர்கின்றது. மற்றபடி மற்ற இரண்டு வகைகளான படுவஞ்சிரம், கீரி வஞ்சிரம் முதலியன அவ்வளவாக கிடைப்பதில்லை, ஒருவேளை பிடிபடுவதில்லை, . எப்படியோ போங்கள்! நாம் இப்போது கிடைக்ககூடிய கோல்வஞ்சிரமாகிய மெளலாசிக்கே வருவோம்.



நான் இக்கட்டுரையை எழுதுகின்ற 2019 வருடத்தில் ஏறத்தாழ கிலோ 2000ரூபாய் வரை சென்றுவிட்டு இப்போது படிப்படியாக 1100 ரூபாய்க்கு வந்து விட்டது. எப்படி இருந்தாலும் சரி 900 ரூபாய்க்கு குறையாது. அதாவது
தலைவால் அல்லாது மத்திய பாகத்திற்கே அந்த   விலை.  தடாலென்று இந்த ஞாயிற்றுக்கிழமையில் வாங்கப்போனால் 1400 ரூ என்கிறார்கள்.

 

கோல்வஞ்சிரமாகிய மெளலாசி அதிகபட்சம் 40 கிலோ வரை வளருமென என் நண்பன் கூறினான். ஏனெனில் அதை வெட்டியும் இருக்கிறான். நான் பார்த்தவரையில் 22 கிலோ மீனை பார்த்திருக்கிறேன். ஒரு ஸ்லைஸ் அரிந்தால் முக்கால் கிலோ வரைக்கும் வரும், அவ்வளவு பெரிதான மீன். படுவஞ்சிரம் மற்றும் கீரிவஞ்சிரம் ஆகியன படுருசி, தவிர கன்னியாகுமரி கடலில் பிடிக்கப்படும் மீனுக்கே அதிகருசி என நான் சொல்வேன்
அரபிக்கடலுக்கு அத்தளவு மகத்துவம்!



பொதுவாக ஐஸ் வைத்த மீனை சாப்பிடக்கூடாது என்பது பொது நம்பிக்கை, வாடிக்கையாளரும்  அவ்வாறே கேட்பார்கள், ஆனால் வஞ்சிரம் பிடிக்கப்போகும் மீனவர்கள் தங்கல் என்று சொல்லக்கூடிய இலாஞ்சியில் சென்று பத்து நாட்களுக்கு மேலாக கடலில் தங்கியே இந்த வஞ்சிரம் மீன்களை பிடிப்பார்கள். [கட்டுமரம் அல்லது சாதரணமான படகுகளில் சென்று மீன்பிடித்தாலே அரைநாள் அல்லது ஒருநாள் ஆகும்] இப்படி பிடிக்கப்படும் மீன்களை ஐஸில் வைத்தே எடுத்து வருவார்கள். ஆக உள்ளூர் மக்களுக்கு ஐஸில் வைக்கப்பட்ட மீன்களே சுவைக்கும். ஐஸ் வைக்கப்படாத மீன்கள் எனில் அது மீனவர்கள் நாவிற்கு வேண்டுமானால் ருசிக்கக்கூடும்.



அப்படி ஐஸில் வைக்கப்படாமல் பிடித்துவரப்பட்ட மீனை சமைத்தால் எப்படி இருக்கும்? முதலில் நாற்றம் கடுமையாக இருக்கும். சமைத்தால் அன்று முழுக்க வீடே மீன்மணம் வீசும். காரணம் அதனில் இருக்கும் இரத்த ஓட்டம்! பிற்பாடு வாசனை திரவியங்கள் போடு கழுவி தள்ளினால் தான் அந்த வாசமே போகும். இரண்டாவதாக அந்த ஐஸில் வைக்கப்படாத மீனை வறுத்தால் அப்பளமென முறுக்கி கொள்ளும். சதையும் மென்மையாக இராது. ஆகவே ஐஸில் வைக்கப்பட்ட மீனே உள்ளூர் மக்களுக்கு சாலச்சிறந்தது என அடித்துச்சொல்வேன்.


ஓமேகா-3 என்ற சத்து நிறைந்த இம்மீன் இதயத்திற்கு மிகவும் நல்லது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இம்மீன் நல்லதாக இருக்கிறதா என பார்ப்பது எப்படி? முதலில் அதன் கண்களை பார்க்க வேண்டும், தெளிவாக இருக்கும், அடுத்து செவுளை, இரத்தத்தில் தோய்ந்து சிவப்பாக இருக்க வேண்டும், மீனை வெட்டினால் சதைப்பகுதி அழுத்தமாக இருக்க வேண்டும், ஒரு நான்கு முறை வாங்குகளேன், பிற்பாடு நீங்களே நிபுணர் ஆகிவிடுவீர்கள்.


அடுத்ததாக அரைகோலா என்றொரு மீன் உண்டு. இது வஞ்சிரம் போலவே உருவைக்கொண்ட போலிவஞ்சிரம். விலையும் படுகுறைவு.சுவையோ படுமட்டம். பலஓட்டல்களுக்கு இந்த மீனையே வாங்கி செல்கின்றனர். எனவே படுகவனமாக பார்த்து வாங்க வேண்டும்.