Saturday, 9 November 2024

இந்துமத சர்ச்சைகள் விவாதங்கள்: பட்டையும் நாமமும்.

 

இந்துமத சர்ச்சைகள் விவாதங்கள்.

நெற்றியில் அணியும் சைவப்பட்டை மற்றும் வைணவ நாமம் ஆகியவற்றின் உண்மைப்பொருளைப் பற்றியக் கட்டுரை





 இலிங்கம், இது சைவர்களின் புனிதக்குறியீடாகும், மற்றும் ஏறத்தாழ அனைத்து இந்துமக்களின், சிவனைக்குறிக்கிற சின்னமாகும். சிவன் கோயில்கள் அனைத்திலும் சிவன் உருவத்திற்குப்பதிலாக இந்தச்சின்னத்தையேப் போற்றி வணங்குகின்றனர்.

 

இலிங்கம் என்பது ஆவுடையார் என்ற கீழ்ப்பாகம் மற்றும் மேல்பாகத்தில் நீளமான உருளை வடிவத்தில் இலிங்கமும்  இருக்கும் வடிவமாகும். இவையிரண்டும் முறையே கீழ்பாகமான ஆவுடையார் என்பது பெண்ணின் மறைவுறுப்பான யோனியையும் மேல்பாகம் ஆணின் மறைவுறுப்பான இலிங்கத்தையும் குறிக்கிறது என்பது அதைப்பார்த்தாலே விளங்கும்.

 

சிவபுராணத்தில் இதற்கும் ஒரு அசிங்கமான கதை சொல்லப்படுகிறது. தாருகாவனம் என்ற காட்டுக்குள்ளே முனிவர்கள் பலர் தம் மனைவியரோடு குமரிகளோடு வாழ்ந்து வந்தனராம், அப்போது முனிவர்களின் தவவலிமையை, சோதிக்க நினைத்த  சிவபெருமான ஆண்டிக்கோலத்தில் நிர்வாணமாக அவ்விடத்திற்குச் சென்றாராம். அவருடைய நிர்வாண சொரூபத்தையும் அழகையும் கண்ட முனிவர்களின் மனைவியரும் குமரிகளும் சொக்கிப்போய் நின்றனராம். இதனால் வெகுண்டுப்போய், வந்திருப்பவர் யார் என்று அறியாத முனிவர்கள், அவருடைய ஆண்குறி அறுந்து போகச் சாபம்  கொடுத்தனராம்.

 

இதனால் அவருடைய ஆண்குறி அறுந்துபோய் பூமியில் விழப்பார்த்ததாம். அப்படி விழுந்தால், பூமியே பிளவுப்பட்டு போய்விடும் என்றஞ்சிய பார்வதி தேவி, அதைத் தன்னுறுப்பான யோனியினால் தாங்கிப்பிடித்துக் கொண்டாராம். அதுவே நாம் வணங்குகிற இலிங்கம் என இந்தப்புராணத்திலே கூறப்பட்டிருக்கிறது.

 

சிவபெருமான் மனிதனாகப் பிறந்து தெய்வீக நிலையை அடைந்தவரோ அல்லது உண்மையிலே தெய்வீகமானவரோ நமக்குத் தெரியாது. ஆனால் இலிங்கச்சின்னம் என்ன சொல்கிறது என்று ஒருவாறு யூகிக்கலாம்.  தொடக்கத்தில் குரங்கிலிருந்து உருமாறிக்கொண்டு மெல்லமெல்ல மனிதராக உருவெடுத்தவர்கள், தாம் உருவாகக் காரணமாக மூலக்காரணமாக இருப்பது ஆண் மற்றும் பெண் உறுப்புகளே என்று விளங்கிக்கொண்டதனால், அவற்றைப் போற்றி வணங்கத் தலைப்பட்டு, ஒரு சின்னமாகச் சமைத்தார்கள். அதுவே இன்று நாம் காணுகின்ற இலிங்கச்சின்னமாகும். இந்த ச்சின்னம் உலகெங்கும் குறிப்பாக ஆசிய நாடுகளில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. 

 

சிவனின் கையிலிருக்கும் சூலம் நினைவுப்படுத்துவது என்ன? நடுப்பக்கம் கூர்மையாக நீட்டிக்கொண்டிருப்பதும், இரண்டுப்பக்கங்களிலும் இருக்கும் இரண்டு முனைகளும் லேசாக வளைந்திருப்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்! ஆகச் சண்டையில் போரில் இந்தச்சூலத்தைப் பயன்படுத்தி இருக்கமாட்டார்கள் என்பது வெட்டவெளிச்சம்! ஆக இந்தச்சூலம் சொல்வது என்ன? இரண்டுபக்கங்களிலும் சற்றே வெளிப்பக்கமாக வளைந்திருப்பது பெண்குறி, மற்றும் நடுவில் குத்திட்டு நிற்பது ஆண்குறியாகும். இப்போது அம்மன் கையிலிருக்கும் சூலம் யாவும் இதே கதையைத்தான் கூறுகின்றன.

 

ஆகப் படைப்பின் தத்துவத்தை, அழகாக விவரிக்கும் இலிங்கம் மற்றும் சூலத்தின் அழகியலைப் போற்றுவோம்.

 

வைணவ நாமம்.


வைணவ நாமம், இது தென்கலை மற்றும் வடகலையென இரண்டு பிரிவுகளாகப் பிரிந்திருந்தாலும், இரண்டு பிரிவுகளுமே விஷ்ணுவைத்தான் வணங்குகின்றன. சரி! விஷயத்திற்கு வருவோம். இரண்டுப் பக்கங்களிலும் இரண்டு வெண்மையான கோடுகள், நடுவே சிவப்பாக ஒரு கோடு, மூன்றையும் இணைத்து மூக்கின் தொடக்கம்வரையில் சற்றே நீட்டியிருப்பார்கள். இது தென்கலை நாமம். வடகலை நாமமானது இரண்டு வெண்மையான கோடுகள், நடுவே சிவப்பான கோடு, இவை மூன்றையும் இணைத்திருப்பார்கள், என்ன மூக்கு வரை நீண்டிருக்காது. இது வடகலை நாமம். இதுத்தவிர பெண்கள் ஒற்றைச்சிவப்பு கோட்டையே நெற்றியில் இட்டிருப்பார்கள். மற்றும் திருமணமான பெண்கள் அதன் நுனியில் வி வடிவத்தில் வரைந்திருப்பார்கள். மற்றும் கன்னடபிராமணர்கள் சிலரும் ஒற்றைக்கோட்டை மஞ்சள் வண்ணத்தில் வரைந்திருப்பார்கள். அவர்கள் பிரம்மசாரிகளாக இருப்பர் எனவும் சொல்கின்றனர்.

 

இவ்விடத்தில் கட்டுரைக்குச் சம்பந்தமான ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிச் சொல்கிறேன். அதாவது சிவனை வணங்கும் சைவ மதம் ஆண்மை சம்பந்தப்பட்டது. அதேசமயம் விஷ்ணுவை கடவுளாக வணங்கும் வைணவ மதம் பெண்மை சம்பந்தப்பட்டது. இதை ஆன்மீகவாதிகளே ஒப்புக் கொள்கின்றனர்.


ஆனாலும் வைணவப்பிரிவைச் சார்ந்தவர்கள் இதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். 

 


அதனால் இலிங்கச்சின்னம் என்பது ஆண் பெண் உறுப்புகள் சேர்ந்த வடிவம் என்பது போல, வைணவ நாமம் என்பது ஒன்று ஆண் பெண் உறுப்புகளாக இருக்கக்கூடும், அல்லது பெண் உறுப்பாக மட்டுமே இருக்கக்கூடும். மற்றபடி நாமம் என்பது விஷ்ணுவின் பாதம் என்பதெல்லாம், முழுக்கமுழுக்க சர்க்கரையும் நெய்யும் கலந்த அல்வா! அப்படியானால் தன் பாதத்தையே விஷ்ணு தன்னுடைய நெற்றியிலே வரைந்திருக்கிறாரா? இடதுப் பாதமா? அல்லது வலது பாதமா? என்ற பதில் இல்லா கேள்விகள் இங்கே பிறக்கின்றன.


 


இருப்பினும் மனிதகுல ஆரம்பகாலத்தில் படைப்பு  தத்துவத்தின் சிகரமாக இது விளங்கிவந்தது என்றால் மிகையல்ல. ஆனால் இத்தளவு விஷயமானது தெரியவந்ததால், அதை நெற்றியில் இடுவது யோசனைக்குரியது!



 

 

 

 

No comments:

Post a Comment